சென்னை:  குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு உள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்த மான நிலத்தை குத்தகைக்கு எடுத்த ராஜம் ஓட்டல்ஸ் நிறுவனம், ‘குயின்ஸ்லேண்ட்’ என்ற பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சொகுசு விடுதியை நடத்தி வருகிறது. ரூ.200 கோடி மதிப்புள்ள 32 ஏக்கர் நிலத்தை அந்நிறுவனம் நீண்ட காலமாக அக்கிரமித்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான நீதிமன்ற விசாரணைகளும் நடைபெற்றது.  விசாரணையின்போது, பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள 32 ஏக்கர் நிலம் வருவாய்துறைக்கு சொந்தமானது என அந்நிறுவனத்தினர் பதிலளித்ததால் வழக்கானது நிராகரிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இன்றைய தினம் மீட்கப்பட்டது.  ரூ.200 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

200கோடி மதிப்பிலான 32.41 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் காவல்துறையினரின் பாதுகாப்பு முன்னிலையில் இன்று அதிரடியாக மீட்டெடுத்து, அறிவிப்பு பலகையினை வைத்தனர்.  அவ்விடத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில், குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தின்  ரோப் கார் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.