தேனி:
தேனி அருகே புழக்கத்தில் விட முயன்ற ரூ.18 லட்சம் கள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் நடத்திய ரோந்து சோதனையின்போது, கம்பம்- கூடலூர் பிரதான சாலையில் உள்ள ஒரு புளியந்தோப்பில் நின்றிருந்த காரை மடக்கி, அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்து ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான கள்ள நோட்டுக்கள் இருந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பல்வேறு நபர்களிடம் புழக்கத்தில் விட கொடுப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் பணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், தேனி-கம்பம் சாலையில் உள்ள தனியார் வங்கியின் பணம் செலுத்தும் மிஷினில் வத்தலக்குண்டுவைச் சேர்ந்த ஜஹாங்கீர் என்பவர் பல லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்களை டெபாசிட் செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஜஹாங்கீரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ள நோட்டுக்களை அச்சடித்து வந்த போடியை சேர்ந்த அப்பாஸ் மற்றும் கதிரேசனை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, அச்சடித்து வைத்திருந்த 18 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளையும், பணம் அச்சடிக்கும் பிரிண்டர்கள் உள்பட அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இதுவரை எவ்வளவு கள்ளப்பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்பது குறித்தும், வேறு பகுதிகளுக்கு கள்ளப்பழகம் அனுப்பப்பட்டுள்ளதா என்பது பற்றியும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.