சென்னை: திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்றும் வருமான வரித்துறை சோதனைகள் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை கணக்கில் வராத ரூ. 18 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளததாக தகவல் வெளியாகி உள்ளது. முழு விவரம் சோதனைகள் முடிந்தபிறகே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய 40 இடங்களிலும் இன்று 5வது நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல் காசா கிராண்ட் நிறுவனம், அப்பாசாமி ரியல் எஸ்டேட் அலுவலத்திலும் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய தொழில் கூட்டாளிகளிடம் இருந்து கணக்கில்வராத 18 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது, காசா கிராண்ட் நிறுவனம் ரூ.700 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.4 கோடியும், அப்பாசாமி ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து ரூ.250 கோடி மதிப்புள்ள விற்பனை ரசீதுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.