சென்னை:  டிட்கோவில் ரூ.15 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தொடர்பாக  ‘டிட்கோ’ வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் மற்றும் 3 இடைத்தரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கரூரில் ரூ.15 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக (டிட்கோ) வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ்  மற்றும் 3 இடைத்தரகர்களும் சிக்கினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் வருவாய் அலுவலரான சூர்யபிரகாஷ்,  தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் டிட்கோ)  மற்றும்  சென்னை மாநகர அம்மா உணவகத்தின் இயக்குனர் பொறுப்பிலும் சில ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக இவர் பணியாற்றியபோது கரூரை சேர்ந்த நல்லமுத்து என்ற தொழில் அதிபரிடம் அசாமில் கொசுவலை மற்றும் சூரிய மின்சக்தி பேனல் நிறுவ ஆர்டர் பெற்று தருவதாகக் கூறி, 3 தவணைகளில் ரூ.16 கோடி வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

பணம் பெற்றுவிட்டு ஆர்டர் பெற்று தராததால் கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் நல்லமுத்து புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.  கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் முத்துகுமார் தலைமையிலான தனிப்படையினர் அவரை,   தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக வருவாய் அலுவலரான சூர்யபிரகாஷை சென்னையில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சூர்யபிரகாஷ் கரூர் அழைத்துச் செல்லப்பட்டார்.  கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிஜேஎம் -1 நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீசார், சூர்யபிரகாஷை சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் சூர்யபிரகாஷ் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிபோது வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த கார்த்திகேயன், திருப்பூரை சேர்ந்த ராஜ்குமார், முத்துகுமார் என்ற தரகர்கள் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அசாமை சேர்ந்த இருவர் உள்ளிட்ட மேலும் 4 பேருக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர்களையும் போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.

இந்த  சம்பவம் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.