சென்னை:
நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து உள்ளது. இந்த மாதம் ரூ.13.50 அதிகரித்து உள்ளது.

சவுதி அரேபியாவில் எண்ணெய் கிடங்கில் நடைபெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் உள்பட பெட்ரோலிய பொருட்கள் விலை அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் சமையல் கியாஸ் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை கடந்த மாதம் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.606.50 ஆக இருந்தது.
தற்போது அது ரூ.620 ஆக உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் சிலிண்டர் விலை ரூ.13.50 அதிகரித்து உள்ளது.
வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ கியாஸ் சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1,174.50-ஆக இருந்தது. தற்போது ரூ.24.50 அதிகரித்து, ரூ.1,199 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல மானியமில்லா சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.590 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.616.50 ஆகவும், மும்பையில் ரூ.562 ஆகவும் இருந்தது. தற்போது முறையே அவை ரூ.15, ரூ.13.5 மற்றும் ரூ.12.5 விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்திருப்பது இலலத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.