சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என  அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

திமுக ஏற்கனவே தேர்தலையொட்டி, மகளிர் உரிமை தொகையை மற்றும் கோடை விடுமுறைக்கான பணம் ரூ.5 ஆயிரம் வழங்கியதுடன், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகை ரூ.2ஆயிரமாக  அதிகரிக்கப்படும் என வாக்குறுதி அளித்தது.  இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, சென்னை  ராயப்பேட்டையில் உள்ள  அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து, அங்குள்ள  அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைத்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடை பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3-ம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

தி.மு.க. ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயர்வு காரணமாக விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது.

  • அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.
  • ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும்.
  • வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்க மாதம் ரூ.2000 வழங்கப்படும். 
  • 12-ம் வகுப்பு வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். 
  • தெருவோர வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
  • மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.8,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.
  • விசைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே அறிவித்த  முதல் கட்ட வாக்குறுதிகள்:

  1. சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குலவிளக்குத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரருக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். இந்தத் தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
  2. ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும்.
  3. தற்போது இருக்கும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  4. கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் மூலம் அரசு சார்பில் இடம் வாங்கி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
  5. நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடுகள் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இடம் வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.
  6. ஒரே வீட்டில் வசிக்கும் பட்டியலின மக்கள், மகன்கள் திருமணம் செய்து தனிக்குடித்தனம் செல்லும்போது அரசு சார்பில் இடம் வாங்கி கான்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
  7. 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாள்களாக உயர்த்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும்.
  8. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் மகளிருக்கு ரூ. 25,000 மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ. 1,200-இல் இருந்து ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.

மாணவர்களின் வங்கிக் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். அந்த தொகையை அரசே ஏற்கும்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமான வழங்கப்படும்.

ஜல்லிகட்டில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ. 10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும். அ அரசாணை வெளியிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இஸ்லாமிய உள்ளிட்ட சிறுபான்மையின பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும்”

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]