சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துகளில் ரூ.1,000 பயண அட்டைக்கான அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை  அமைச்சர் கண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.

கொரோன பொதுமுடக்கம் காரணமாக பேருந்து சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது  தொற்று பரவல் குறைவாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பயணிக ளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. முன்னதாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பேருந்துகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக  மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று காலை 6 மணி முதல் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 100% பேருந்து சேவை தொடங்கப்பட்டாலும் பேருந்து இருக்கைகளில் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அரசு அறிவித்திருந்தது.   ஆயினும் பயணிகள் எண்ணிக்கை இன்று மிகவும் குறைவாகவே   காணப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கண்ணப்பன், சென்னையில் 1800 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் கட்டணமின்றி பயணம் செய்ய அடையாள அட்டை கட்டாயம் என்று கூறியவர்,  ரூ.1,000 பயண அட்டைக்கான அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.