சென்னை: தமிழ்நாடு அரசின் தகுதி வாய்ந்த பெண்களுக்கான உதவித்தொகை என அறிவிக்கப்பட்ட விவகாரம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுதொடர்பாக வீடியோ வெளியிட்டVoice of Savukku என்ற யுடியுபர் அட்மின் கைது செய்யப்பட்டார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த வீடியோவைமீண்டும் பகிர்ந்துள்ள    சவுக்கு சங்கர் முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள் என ஆவேசமாக கூறி உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ,  தகுதி வாய்ந்த குடும்பங்களில் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது என்று அறிவித்தார். மத்திய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டு இருக்கும் சமையல் எரிவாயு விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

அதில் அமைச்சரின் அறிவிப்பான,  தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என்று அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர் . தமிழக அரசின் இந்த அறிவிப்பை கிண்டலடிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் மீம்ஸ் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  நடிகர்கள் கவுண்டமணி -செந்தில் நடித்த படத்தின் காமெடி காட்சிகளோடு ஒப்பிட்டு சவுக்கு சங்கரின் ஆதரவாளரும் வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்ற டுவிட்டர் தளத்தில் அக்கவுண்டை வைத்திருக்கும் பிரதீப் வீடியோ வெளியிட்டு இருந்தார். 

இதுதொடர்பாக, மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. பெண்களை விமர்சித்து வெளியிட்ட சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் ஆணையம் சார்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

 

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரதீப்பை கைது செய்துள்ளனர். அவர்மீது, 153, 505 (1) (b) மற்றும் 509 IT சட்டத்தின் கீழ் Cr No 52/2023 இல்  வழக்கு பதிவு செய்து, காவல்துறை கைது செய்துள்ளது.

காவல்துறையினரின் நடவடிக்கை  கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, சவுக்கு சங்கரும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிரதீப் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் சவுக்கு சங்கர். நானும் இந்த வீடியோவை பதிவு செய்திருக்கிறேன் முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள் என்று ஆவேசப்பட்டு இருக்கிறார்.