டெல்லி: டெல்லி ஆம்ஆத்மி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ள நிலையில், அவரை 7 நாள் நீதிமன்றம் காவலில் வைக்க நீதிமைன்றம் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சுதந்திர இந்திய வரலாற்றில் சிட்டிங் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பதால் தேசிய அளவில் இது பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
மதுபானம் தயாரிக்கும், சாராய தொழிலதிபர்களிடம் இருந்து லஞ்சம் கேட்ட முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால்தான் என குற்றம் சாட்டி உள்ள அமலாக்கத் துறை கெஜ்ரிவால்தான் இடைத்தரகராக செயல்பட்டார் என்றும், ரூ. 100 கோடி லஞ்சம் கேட்டதாகவும் அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளது.
காந்தியவாதி அண்ணா ஹசாரே உடன் சேர்ந்து ஊழக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்தான் முன்னாள் ஐஏஎஸ்எஸ் அதிகாரியாக அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர், ஹசாரே நடவடிக்கை பிடிக்கவில்லை என்று கூறி, தனி அரசியல் கட்சி தொடங்கி, ஆட்சியை பிடித்து டெல்லி மாநில முதல்வராக இருந்து வருகிறார். இவரது தலைமையிலான ஆட்சியில்தான் டெல்லி மதுபான கொள்கை விவரம் பெரும் புயலை கிளப்பியது.
இதுதொடர்பான புகாரின்பேரில், அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியா (கைதுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டார்), ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் அமலாக்க்துறையால் கைது கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டாக திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிஆர்எஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான கவிதாவும் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதற்கிடையில், டெல்லி மதுபான கொள்கை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராக மறுத்து வந்ததுடன், ஒவ்வொரு முறையில் மத்தியஅரசு மீதும், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மீது புதுப்புது குற்றச்சாட்டுக்களை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
ஆனால், அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், அதில் ஜாமின் பெற்ற கெஜ்ரிவால், மீண்டும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கும் ஆஜராக மறுத்தார். இதற்கிடையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது.
இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் 21ந்தேதி கெஜ்ரிவால் வீட்டில் சோதனை மேற்கொண்டு, அவரை அதிரடியாக கெஜ்ரிவாலை கைது செய்தனர். இதைத்தோடர்ந்து நேற்று (22ந்தேதி) கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “என்னுடைய வாழ்க்கை நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஜெயிலில் இருந்து கொண்டு நாட்டிற்காக பணியாற்றுவேன்” என்றார்.
பின்னர் நடைபெற்ற விசாரணையின்போது, மதுபான கொள்கையில் மூளையாக செயல்பட்டவர் அரவிந்த் கெஜ்ரிவால் என்றும், மதுபான கொள்கையை மாற்றி அமைக்கப்பட்டு வெளியிடுவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெறப்பட்டது. இந்த பணம் கோவா, பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதைத்தொடர்ந்து, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை 10 நாள்கள் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரியது. அப்போது, கெஜ்ரிவாலுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை முன்வைத்து.
லஞ்சம் வாங்கினாரா கெஜ்ரிவால்?
சாராய தொழிலதிபர்களிடம் இருந்து லஞ்சம் கேட்ட முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால்தான் என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, “டெல்லி மதுபான கொள்கையை உருவாக்குவதில் கெஜ்ரிவால் நேரடியாக ஈடுபட்டார் என்றும், மற்ற அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து மதுபான ஊழலில் முக்கிய புள்ளியாக உள்ளார். முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால்தான். டெல்லி மதுபான கொள்கையை வகுத்து செயல்படுத்தியதற்காக சவுத் குழுமத்திடமிருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றவர் கெஜ்ரிவால்.
மதுபான ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் சவுத் குழுமத்துக்கும் இடையே இடைத்தரகராக செயல்பட்டவர் கெஜ்ரிவால். பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவதற்காக சவுத் குழுமத்தை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட சிலரிடம் இருந்து 100 கோடி ரூபாய் கேட்டுள்ளார்.
கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 45 கோடி ரூபாய் பணம் ஹவாலா வழிகளில் இருந்து வந்த லஞ்சம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்கமூலமும் சாட்சிகளின் வாக்குமூலமும் அழைப்பு விவரப் பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி ஒரு தனிநபர் அல்ல. ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் நடத்தைக்கு ஒவ்வொரு நபரும் பொறுப்பாவார்கள்” என வாதிட்டார்.
இதையடுத்து, கெஜ்ரிவாலை 7 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடிக்கு அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.