போலீஸ் தாக்கி உயிரிழந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Must read

சென்னை:
போலீஸ் தாக்கி உயிரிழந்த சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் ஏத்தாப்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக எடப்பட்டிபுதூரை சேர்ந்த விவசாயி முருகேசன் (45) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் இரண்டு டூவீலரில் வந்துள்ளார். இவர்கள் 4 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் வந்த டூவீலர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்துள்ளனர். இதனால், போலீசாருக்கும், முருகேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர். பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,இன்று காலை முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், முருகேசனின் உயிரிழப்புக்கு காரணமான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்திய சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி,அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், மேலும் முருகேசன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் கூறியுள்ளார்.

More articles

Latest article