புதுக்கோட்டை: கூட்டுறவு வங்கியில் ரூ.1.8 கோடி முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக,  சஸ்பெண்ட் செய்யப்பட்ட வங்கி அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர்  வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினர் நடத்திய சோதனையை தொடர்ந்து, அவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது கூட்டுறவு வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சியில், ஊழல்கள் நடைபெற்றதாக, திமுக குற்றம் சாட்டி வந்தது. தற்போது ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்று ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடைபெற்றதாக சில அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அதுபோல,  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கீரனூரில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி  வங்கியில் ரூ.1 கோடி முறைகேடு தொடர்பாக வங்கி செயலாளர் நீலகண்டன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர்மீது,  முறைகேடாக,  மொத்தம் ரூ.3 கோடியே 63 லட்சத்து 14 ஆயிரத்து 200 கடன் தொகை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.   நகையே இல்லாமல் ரூ.1 கோடியே 8 லட்சத்து 17 ஆயிரத்து 500 கடன் வழங்கிது  போ போலி  கணக்கு காண்பித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, அந்தவங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல்  ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி  உத்தரவிட்டார். மேலும் நகைமதிப்பீட்டாளர் கனகவேலு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் 3 பேர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட வங்கி செயலாளர் நீலகண்டன் இன்று அவரது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வங்கி அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர் வெங்கடாசலம் வீடுகளில் லஞ்சஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி, அவருக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்ததால்,  கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான வெங்கடோசலம்  டிசம்பர்  2 ஆம் தேதி அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளும் தரப்பினரின் டார்ச்சர் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் விமர்சிக்கப்பட்டது.  இந்த நிலையில், தற்போது கூட்டுறவு வங்கி செயலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.