இங்கிலாந்து அரச குடும்பத்தில் சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு குறைவே இல்லை.

ராணியின் இடது கையில் உள்ள கை பை வலது கைக்கு மாறினால் மட்டுமல்ல, அவர் வலதுகாலை முன்னே வைத்து நடந்து செல்ல இளவரசர் பிலிப் ராணிக்கு பின்னால் தான் நடந்து வரவேண்டும் என்பது வரை ஏகப்பட்ட சம்பிரதாயங்கள்.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை வெளியாட்கள் யாரும் தொட்டுப்பேசக்கூடாது என்ற சம்பிரதாயம் அரச குடும்பத்தில் சமீபத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது உலகறிந்த ரகசியம்.

இப்படி பல சம்பிரதாயங்கள் மட்டுமன்றி இவர்கள் பயன்படுத்தும் சோப்பு முதல் சீப்பு வரை அனைத்தும் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது.

அதேபோல், அவர்களுக்கான தேன் பக்கிங்காம் அரண்மனை மற்றும் கிளாரென்ஸ் ஹவுஸ் ஆகிய இரண்டு இடங்களில் வளர்க்கப்படும் தேனீக்களிடம் இருந்து பெறப்படுகிறது.

79 வயதான ஜான் சாப்பல் இந்த தேனீக்களை வளர்த்து வருகிறார். பக்கிங்காம் அரண்மனையில் ஐந்து தேன் கூடுகளும், கிளாரென்ஸ் ஹவுஸில் இரண்டு தேன் கூடுகளும் உள்ள நிலையில் இவற்றில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் உள்ளது.

மகாராணி எலிசபெத் மரணமடைந்த செய்தியை தேனீ வளர்ப்பாளர் சாப்பல் இந்த தேன் கூடு ஒவ்வொன்றின் அருகிலும் சென்று கிசுகிசுத்தார், பின்னர் ஒவ்வொன்றின் மீதும் கருப்பு ரிப்பன் கட்டி துக்கத்தை பகிர்ந்துகொண்டார்.

தவிர, இனி உங்கள் முதலாளி மன்னர் மூன்றாம் சார்லஸ் என்பதை கூறியதுடன் அவர் மிகவும் நல்லவர் என்றும் கூறினார்.

பலநூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் இந்த சம்பிரதாயத்தின் பின்னணியில் அரச குடும்பத்தின் ஐதீகம் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

தங்களது முதலாளி இறந்த செய்தி தேனீக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்றால் அவை தேன் சேகரிப்பதை நிறுத்திவிட்டு இறந்து விடும் என்ற மூட நம்பிக்கை அரச குடும்பத்தினரிடையே இருந்து வருவதால் இந்த வினோத நடவடிக்கை கடைபிடிக்கப்படுவதாக தேனீ வளர்ப்பாளர் சாப்பல் தெரிவித்துள்ளார்.