சென்னை: சென்னை வேப்பேரி, சூளைமேடு, பெரியமேடு சாலையில், பட்டாக்கத்திகளுடன் 3 ரவுடிகள் இருசக்கர வாகனத்தில் கையில் பட்டாக்கத்தியை சுழற்றிக்கொண்டு அட்டூழியம் செய்தனர். இதில் பொதுமக்கள் 3 பேருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்டாகத்தியால் வெட்டியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை வேப்பேரி குறவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. அதே பகுதியைச்சேர்ந்த இன்னொருவர் கான் இவர்கள் இருவரும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் கூச்சல் போட்டுக்கொண்டேபளபளக்கும் பட்டாகத்திகளைக் சுழற்றிக் கொண்டு வந்த நபர்கள், சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் கான் என்பவர்களை பட்டாகத்தியால் வெட்டினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தட்டிக்கேட்க சென்ற மற்றொரு நபருக்கும் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த கும்பலின் அட்டூழியத்தை பார்த்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினார்கள். பின்னர் அந்த நபர்கள் தொடர்ந்து கூச்சல் போட்டுக்கொண்டே பெரியமேடு வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து சாலையில் சென்றோரை வெட்டியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக்கொண்டு பட்டாக்கத்திகளுடன் அட்டூடியத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்தனர். ட்டாக்கத்தியுடன் அட்டூழியத்தில் ஈடுபட்ட 3 பேரும் பெரிய மேடு பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் பெயர் பரத், விஜயகுமார், ரகுபதி என்று கூறிய காவல்துறையனர், அவர்கள் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து, அந்த 3 ரவுடிகளையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். வேப்பேரி, பெரியமேடு போலீசில் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் காலியாக உள்ளதாலும், போதிய போலீசார் பணியில் இல்லாததாலும் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சென்னையில் பிரதான பகுதியான வேப்பேரியில், ரவுடிகள் பட்டாக்கத்தியுடன் அட்டூழியம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.