சென்னை; ஓபிஎஸ் குற்றம்சாட்டிய வேளாண் பொருட்கள் விற்பனைச் சட்டம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். ஓபிஎஸ்  வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்று மறுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டம் 1987, பிரிவு 24(1)-ன்படி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு வெளியே நடைபெறும் வர்த்தகத்திற்கு சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இச்சட்டம் 1987ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும்.

தமிழகத்தில் 27 விற்பனைக்குழுக்களின் கட்டுப்பாட்டில் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இயங்கிவருகின்றன. ஒவ்வொரு விற்பனைக் குழுவும் குறிப்பிட்ட அறிவிக்கை செய்யப்பட்ட விளைபொருட்களின் விற்பனையினை முறைப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றன. ஒரு மாவட்டத்தில் விளையும் விளைபொருட்களை அடுத்த மாவட்டத்தில் விற்பனை செய்வதில் நடைமுறைச் சிக்கல் ஏற்படுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்காத சூழ்நிலை நிலவி வந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் அதிகளவில் விளைவிக்கக்கூடிய 40 வகையான வேளாண் விளைபொருட்களின் விற்பனையினை ஒரே சீரான முறையில் பரிவர்த்தனை செய்யும் வகையில், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி 2008-ஆம் ஆண்டிலேயே நடவடிக்கை எடுத்தார். 2008 ஆம் ஆண்டில் அவரால் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கடந்த 2021-22 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் 40 வேளாண் விளைபொருட்களுக்கும் ஒரே சீரான அறிவிக்கை கொண்டு வரப்படும் என அறிவித்து, ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே, மாநிலம் முழுவதும் ஒரே சீரான அறிவிக்கை (Uniform Notification) 25.05.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. “சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்” என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பொன்மொழிக்கேற்ப இவ்வரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.

அரசின் இந்த நடவடிக்கைகளினால், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையினை மாநிலத்தில் எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் பெற இயலும். மேலும், வியாபாரிகளிடையே வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம் செய்வ தில் ஆர்வமும் பங்களிப்பும் அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பது நிச்சயமாகிறது.

தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டம் 1987-இன்படி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடைபெறும் வர்த்தகத்திற்கும், ஒரு சதவீத சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை ஆண்டாண்டு காலமாக 1936-ஆம் ஆண்டிலிருந்தே வசூலிக்கப்பட்டு வருகிறது. இது ஒன்றும் புதிதான நடைமுறை அல்ல என்பதை முன்னாள் முதல்வர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நடைமுறை தமிழகத்தில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் சந்தை வரி வசூலிக்கப்படுகிறது. பஞ்சாபில் 8.5 சதவீதமும், அரியானாவில் 6.5 சதவீதமும், மகாராஷ்டிராவில் 6 சதவீதமும், ஆந்திரா, தெலுங்கானாவில் ஒரு சதவீதமும், சந்தை வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

அடுத்து, இந்தச் சட்டத்தின் கீழ், 120 வேளாண் விளைபொருட்கள் அட்டவணையில் இருந்தாலும், தமிழகத்தில் அதிகளவில் விளைவிக்கக்கூடிய 40 வேளாண் விளைபொருட்களுக்கு மட்டுமே, ஒரு சதவீத சந்தை வரி வசூலிக்கப்பட்டு வந்த நடைமுறைதான் தற்பொது தொடர்ந்து வருகிறது. எந்த ஒரு விளைபொருளும் புதிதாக சேர்க்கப்படவில்லை அனைத்து மாவட்டங்களிலும் இதனை சீரான அறிவிக்கை செய்வதன் மூலம் அனைத்து விவசாயிகளும், வியாபாரிகளும் பயனடைவர்.

பொருட்களுக்கு ஒரு சதவீத சந்தைக்கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், முதலில் பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகளே என்று கூறுவது முற்றிலும் தவறான தகவலாகும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பதற்கு எவ்விதமான கட்டணமும் விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படுவதில்லை தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டம் 1987, பிரிவு 24(1)-ன்படி அதிகபட்சமாக 2 சதவீதம் சந்தைக் கட்டணம் வசூலிக்க வழிவகை இருந்தும், வியாபாரிகளின் நலன் கருதி ஒரே ஒரு சதவீதம் மட்டுமே அதிமுக காலத்திலும், திமுக காலத்திலும், வியாபாரிகளிடமிருந்து சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுவருகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் “கட்டாய வேளாண் விற்பனை” நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் “விருப்பார்ந்த வேளாண் விற்பனை” நடைமுறையில் உள்ளதால், தமிழகத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ பரிவர்த்தனை செய்யலாம்.

வெளி மாநிலங்களில் இருந்தோ வெளிநாடுகளில் இருந்தோ கொண்டு வரப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை மாறாக அந்த வேளாண் விளைபொருள் விற்பனை செய்யப்படும்போது மட்டுமே சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஒரே சீரான அறிவிக்கையினால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் மாறாக விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிட்டும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இதனால் விலைவாசி உயரும் என்பதும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் முற்றிலும் தவறான கருத்தாகும்.

ஒரே சீரான அறிவிக்கையினால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் அனைத்து உற்பத்தி பொருட்களையும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்திடவும், சேமிக்கவும், பொருளீட்டுக் கடன் பெற்றும் பயன் பெறலாம். விவசாயிகள் மட்டுமல்லாமல், வியாபாரிகளும் அறிவிக்கை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யவும், சீரான விலை பெறவும், இருப்பு வைத்திடவும், பொருளீட்டுக் கடன் பெற்றிடவும் இயலும்.

மேலும், விவசாயிகளுக்கு உரிய விலையும் உடனடிப்பணமும் கிடைக்கும் பொருட்டு, மின்னணு வர்த்தகம் போன்ற பல்வேறு சரத்துக்களை 1987ம் வருடத்திய சட்டத்தில் கொண்டு வருவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உத்தரவின்பேரில் தற்போதைய வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளரின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள், வியாபாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்து வருகிறது.

மேலும் வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கப்படும் ஒரு சதவீத சந்தைக் கட்டணம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலனுக்காக மட்டுமே பயன் படுத்தப்படுகிறது என்பது சட்டமன்ற எதிர்கட்டசி துணைத் தலைவருக்கு நன்கு தெரியும். இந்த சந்தைக் கட்டணம் மூலம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், உலர்களங்கள், பரிவர்த்தனைக் கூடங்கள், உழவர் சந்தைகள், முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்கள், விவசாயிகள் ஓய்வறை, வியாபாரிகள் ஓய்வறை மற்றும் விவசாயிகள், வியாபாரிகளுக்குத் தேவை யான அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகளும், வியாபாரிகளும் பயன் பெற்று வருகின்றனர்.

தற்போது, குறைந்த நீரில், குறைந்த நாளில் அதிக வருமானம் தரக்கூடிய பயிர்களை மாற்றுப் பயிர்களாக சாகுபடி செய்யும் நடைமுறையினை தமிழகஅரசு அனைத்து விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி வருகிறது. எனவே, மாநிலம் முழுவதும் லாபம் தரக்கூடிய பயிர்களை சாகுபடி செய்து, அதிக விலை கிடைக்க வழிவகை செய்யும் நோக்கத்தில் தான் இந்த ஒரே சீரான அறிவிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் மட்டுமல்லாது வியாபாரிகளும் தங்களுக்கு வேண்டிய விளைபொருட்களை மாநிலத்தில் எந்த ஒரு பகுதியிலும் எளிதாகக் கொள்முதல் செய்ய இயலும்.

மேலும், அதிமுக அரசு 2018-ஆம் ஆண்டிலேயே அனைத்து வணிகர்களுக்கும் ஒற்றை உரிமம் என்ற நடைமுறையை அமல்படுத்தி, ஏறக்குறைய 3200-க்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு ஒற்றை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதிமுக அரசு செயல்படுத்திய ஒற்றை உரிமத்தின் பலன் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒரே சீரான அறிவிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கு கூடுதல் செஸ் விதிக்கப்படு வதாக தவறான புரிதலின் அடிப்படையில் அறிக்கை ஒன்றினை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த சரியான விபரங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.அரசால் வெளியிடப்பட்டுள்ள தற்போதைய அறிக்கையானது நம் விவசாயிகளுக்கு தமிழகம் முழுமையும் நியாமான நல்ல விலை அவர்களுடைய விலை பொருட்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டதாகும்.

வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்க அதற்கென தனி நிதிநிலை அறிக்கை தயாரித்து சமர்ப்பித்து வரும் திமுக அரசு நம் மாநில விவசாயிகளை காப்பதையும் அவர்கள் வாழ்வு வளம் பெறவும் மட்டுமே திட்டங்களை நிறைவேற்றி வருவதை மக்கள் அறிவார்கள்.எனவே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் 29.05.2022 ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கை முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரான கருத்து என்பதுடன் உண்மைக்குப் புறம்பான கூற்றுகளாகும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.