2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் கடந்த வாரம் அறிவித்தார்.
இதனை அடுத்து, லண்டனில் நேற்று தொடங்கிய லேவர் கோப்பை தொடரில் தனது கடைசி ஆட்டத்தை பெடரர் ஆடினார்.
ஐரோப்பிய அணிக்கும் – உலக அணிக்கும் இடையிலான இரட்டையர் பிரிவில் ஐரோப்பிய அணி சார்பில் ரோஜர் பெடரர் – ரபேல் நடால் ஜோடி விளையாடியது.
உலக அணியில் இடம்பெற்ற அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ – ஜாக் சாக் ஜோடியுடன் மோதினர்.
இதில் டியாபோ ஜாக்சாக் ஜோடியிடம் 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரர் – ரபேல் நடால் ஜோடி தோல்வி அடைந்தது.
தனது கடைசி போட்டியில் தோல்வி அடைந்த ரோஜர் பெடரர் கண்ணீருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் “இது ஒரு அற்புதமான நாள், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வருத்தமாக இல்லை. இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.
If there's one thing you watch today, make it this.#LaverCup | @rogerfederer pic.twitter.com/Ks9JqEeR6B
— Laver Cup (@LaverCup) September 23, 2022
24 ஆண்டுகளில் 1500 க்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்றுள்ள ரோஜர் பெடரர் சுமார் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
விம்பிள்டன் போட்டிகளில் அதிக முறை (8 முறை) பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்ற ரோஜர் பெடரர் 310 வாரங்கள் தொடர்ந்து டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.