திருச்சி:

பிரபல ஜுவல்லரியான லலிதா ஜுவல்லரியின் திருச்சி கிளையில் நள்ளிரவு சுவரை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கொள்ளை சம்பவம் குறித்து,போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளது லலிதா ஜூவல்லரி நகைக் கடை. நேற்றிரவு வழக்கம் போல் பணிகளை முடித்து விட்டு ஊழியர்கள் புறப்பட்டுச் சென்ற நிலையில், இரவில் 6 காவலாளிகள் கடைக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை கடையை திறந்து பார்த்த போது, கடையினள் இரந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடடினயாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடையின் மேற்கு பகுதியில் உள்ள சுவரில் துளையிடப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ஒரு ஆள் நுழையும் அளவுக்கு போடப்பட்டிருந்த அந்த துளை வழியாக உள்ளே சென்று மர்ம நபர்கள் நகைகளை கொள்ளை யடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இரவு 6 காவலர்கள் பணியில் இருந்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைக் கடை வளாகம் மற்றும் கடைக்குள் இருக்கும் சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் கொள்ளையர்கள், தாங்கள் வந்து சென்ற பகுதிகளில் மிளகாய்ப் பொடி தூவி உள்ளதால், மோப்ப நாயால் மோப்பம் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லலிதா ஜுவல்லரியில் முகமூடி அணிந்து திருடும் திருடர்கள்

இதுகுறித்து கூறிய காவல்துறை அதிகாரி,  இந்த கொள்ளைச் சம்பவத்தில் வடமாநிலக் கொள்ளைக் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், கொள்ளையர்கள் இருவரும் நாய் மற்றும் பூனை போன்ற முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளது சிசிடிவி பதிவில் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த கடையில்  மொத்தம் மூன்று தளங்கள் உள்ள நிலையில் முதல் தளத்தில் உள்ள ஒட்டு மொத்த தங்க, வைர நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு 40 முதல் 50 கோடி ரூபாய் வரை இருக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

திருச்சியில் பரபரப்பான இடத்தில் உள்ள நகைக் கடையில் நடைபெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காமிரா பதிவு குறித்த காவல்துறையினர்,  இரு கொள்ளையர்கள் முகமூடி அணிந்து உள்ளே சென்றிருப்பதுதும்,  லலிதா ஜூவல்லரி தரை தளத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவான காட்சிகளில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளது. விலங்குகள் போன்ற முகமூடிகளை அணிந்துள்ள இரு கொள்ளையர்கள், நகைகளை எடுத்து தாங்கள் கொண்டு வந்திருந்த பைகளில் அள்ளிப் போடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.

சிசிடிவி புட்டேஜ்படி, அதிகாலை 2 மணிக்கு கொள்ளைச் சம்பவம் அரங்கேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.