சென்னை :
சென்னை பள்ளிக்கரணை ராஜலக்ஷ்மி நகரில் இன்று மாலை கனமழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
நீருக்கு அடியில் சாலை போடும் திட்டமோ என நினைத்து வேடிக்கை பார்த்த அப்பகுதி மக்கள், தங்கள் வரிப்பணத்தில் புதிதாக போட்ட சாலை முழுவதும் மழைநீரில் கரைந்து ஓடியதைக்கண்டு ஆத்திரமடைந்தனர்.
இதனால் சாலை பணியை நிறுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தியதோடு பருவமழை காலத்தில் சாலை அமைக்கக் கூடாது என்ற விதியையும் மீறி சாலை அமைக்க அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.