சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதுசூதனன் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

நேற்று நடைபெற்ற அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் பலத்த போட்டிகளுக்கிடையே மதுசூதனன் அதிமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அ தைத்தொடர்ந்து,  அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதுசூதனன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவை வெள்ளிக்கிழமை (டிச.1) தாக்கல் செய்ய உள்ளார்.

மறைந்த ஜெயலலிதாவின் அன்புக்கும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கும் உரியவராக மதுசூதனன் விளங்கினார். அவரது தேர்தல் வெற்றிக்கு முன்னோடியாக வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கட்சியினர் அனைவரும் திரளாக வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினரான டி.ஜி.வெங்கடேஷ்பாபு தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைப்பார்.

ஆர்.கே.நகரில் வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பிறகு, மாலையே தேர்தல் பிரசாரத்தை மதுசூதனன் தொடங்குகிறார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என பலரும் பிரசாரங்களில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.