இரண்டாவது கட்டமாக நடிகர் ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்திக்கும் ரஜினி, அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 31) தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை 8.58 மணிக்கு மேடையேறினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“கடந்த ஆறு நாட்களாக ரசிகர்கள் கட்டுப்பாடாக நடந்துகொண்டனர். இந்த கட்டுப்பாடு இருந்தால் சிறந்த எதிர்கால் உண்டு. இதற்கு உதவிய மன்ற பொறுப்பாளர் சுதாகர் உள்ளிட்டோருக்கு நன்றி. காவல்துறையினர், ஊடகத்துறையினருக்கு நன்றி.
எனது அரசியல் பிரவேசம் பற்றி ரொம்ப பில்ட் அப் ஆகிவிட்டது. அதுக்கு நான் காரணம் அல்ல. தானா பில்ட் அப் ஆகிவிட்டது. எனக்கு அரசியல் குறித்து பயம் இல்லை. மீடியாவைப் பார்த்துத்தான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் மீடியா பார்த்து பயப்படுகிறார்கள். நான் குழந்தை.
சோ சார் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். மீடியாகிட்ட ஜாக்கிரதையா இருங்க என்றார். இந்த நேரத்தில் அவரை மிஸ் பண்ணுகிறேன். அவர் இருந்தால் எனக்கு பலமாக இருக்கும். அவரது ஆத்மா என்னுடன் இருக்கும்.
இப்போது விசயத்துக்கு வருகிறேன்.
கண்ணன அர்ஜூனனிடம், “உன் கடமையை செய். யுத்தம் செய். வெற்றி அல்லது வீரமரணம். யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள்.
இதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து, போட்டியிடுவேன். தமிழ்நாடு முழுதும் 234 தொகுதியிலும் போட்டியிடுவோம்.
இது பதவிக்காக அல்ல. அப்படி இருந்தால் 1996லேயே வந்திருப்பேன்.
நாடு கெட்டுப்போய்விட்டது.. ஜனநாயகம் கெட்டுப்போய்விட்டது. சமீப காலமாக நடந்த பல சம்பவங்கள் தமிழக மக்களை தலை குனிய வைத்துவிட்டது. எல்லா மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் நான் முடிவெடுக்கவில்லை என்றால், தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனக்கும் குற்ற உணர்வு துரத்தும்.
எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. சிஸ்டம் மாத்தணும். உண்மையான நாணயமான வெளிப்டையான சாதி மத வேறுபாடு இல்லாத ஆன்மிக அரசியல் கொண்டுவருவேன்” என்று ரஜினி பேசினார்.