பாட்னா: தேர்தல் பிரசாரத்தின்போது பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் மீது வெங்காயம் வீசப்பட்டதற்கு, ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில் ஏற்கனவே கடந்த 2கட்ட வாக்குப்பதிவுகள், அக்டோபர் மாதம் 28 ம் தேதி, நவம்பர் மாதம் 2ந்தேதி 2வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 3வது கட்டமாக இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்து உள்ளது.
இந்த நிலையில், மதுபானி ஹர்லாகி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசினார். அப்போது அவர் மீது கூட்டத்தில் இருந்து வெங்காயம் வீசிப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வெங்காயம் வீசியவர்களை பாதுகாப்பு படையினர் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்களை தடுத்த நிதிஷ், நீங்கள் விரும்பும் அளவிற்கு தூக்கி எறியுங்கள் என கூறினார். இந்த விவகாரம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நிதிஷ்குமார் மீது வெங்காயம் வீசப்பட்டதற்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிராக போராடவும், எதிர்ப்பை பதிவு செய்யவும் ஜனநாயகத்தில் பல வழிகள் இருக்கின்றன. வாக்களிப்பது கூட நமது எதிர்ப்பை காட்டும் ஒரு வழிமுறைதான். அதை விட்டுவிட்டு, முதல்வர் மீது வெங்காயம் எறிவது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது. மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்வைத்து போராட வேண்டுமே தவிர, கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கண்டித்துள்ளார்.