பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து பிரதமராக பொறுப்பேற்க இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்-ஸை பக்கிங்காம் அரண்மனையில் சென்று சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து ரிஷி சுனக்-கை இங்கிலாந்தின் 57 வது பிரதமராக நியமித்து உத்தரவிட்ட மன்னர் சார்லஸ் அவருக்கு பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

1812 க்குப் பிறகு மிக இளம் வயதில் பிரதமர் பதவி ஏற்கும் நபர் என்ற பெருமையைப் பெற்ற 42 வயதான ரிஷி சுனக் பிரதமராக தனது பணிகளை தொடர 10 டவுனிங் ஸ்ட்ரீட்-டில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு வந்தார்.

முன்னதாக அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய திரை பிரபலம் அமிதாப்பச்சன், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் ரிஷி சுனக்-கின் மாமனாரும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.