திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் முற்றி வருகிறது.  இந்த நிலையில், கேரளாவில் உள்ள  9 பல்கலைக்கழக  துணைவேந்தர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவ்வாறு செய்யாத நிலையில், அவர்களுக்கு  விளக்கம் கேட்டு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில், கவர்னரின் ஒப்புதலின்றி மாநில அரசே பல்கலைக்கழகங்களுக்கு  துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், மேற்குவங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமனம்  செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கவர்னரின் ஒப்புதலின்றி பல்கலைக்கழகங்களுக்கு  துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லாது என்பதை உறுதி செய்தது.

இதற்கிடையில், கேரள மாநிலத்தில், ஆளுநர் ஒப்புதலின்றி முதல்வர் பினராயி தலைமையிலான மாநில அரசு, 9 பல்கலைக்கழங்களில்  துணைவேந்தர்களை நியமனம் செய்திருந்தது. இதற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த மாநில ஆளுநர்  ஆரிப் முகமது கான், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டிவிட்டரில், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாநிலத்தில் உள்ள 9 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். அந்த பதிவுடன் எந்ததெந்த பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பட்டியலையும் அவர் இணைத்து இருந்தார். அக்டோபர் 24ம் தேதி (நேற்று) காலை 11.30 மணிக்குள் அனைவரும் ராஜினாமா கடிதங்களை அனுப்ப வேண்டும் என அவர் உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால் சம்பந்தப்பட்ட 9 துணைவேந்தர்களும் ஆளுநரின் உத்தரவை மதிக்கவில்லை. ஆனால்,   கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆளுநரின் நடவடிக்கையை  கடுமையாக சாடினார். பல்கலைக்கழக வேந்தரின் உத்தரவுக்கு எதிராக கேரள அரசாங்கம் கேரள உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. மேலும் நேற்ற இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வுக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், பதவி விலகாதற்கு காரணம் கேட்டு 9 துணைவேந்தர்களுக்கும்  நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.  சம்பந்தப்பட்ட துணைவேந்தர்களுக்கு நவம்பர் 3ம் தேதி அல்லது அதற்கு முன் மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்பட்டுள்ளது என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவர்னரின் ஒப்புதலின்றி துணைவேந்தர் நியமனம் செல்லாது! மேற்குவங்க முதல்வருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்…