சென்னை

மிழகத்தில் அரிசி விலை உயர்வு மிகவும் அதிகரித்துள்ளது.

நம்முடைய அன்றாட உணவில் அரிசியின் பங்கு இன்றியமையாதது.நாம் காலை உணவாக இட்லி, தோசையும் மதியம் சாப்பாடு வகையிலும் அரிசியை அதிகளவில் பயன்படுத்துகிறோம். இம்மாதம் 18 ஆம் தேதி முதல் பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அரிசி ஆலைகள் மற்றும் அரிசி வியாபாரிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அவர்கள் அத்தியாவசியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதால் அரிசி உள்ளிட்டவற்றின் விலை உயரும் என்று தெரிவித்தனர்.

ஜிஎஸ்டி வரம்புக்குள் தளர்வான அரிசி வராது என்றாலும், மாநில உணவுத் துறை அனைத்து கடைக்காரர்களுக்கும் அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை பேக் செய்யப்பட்ட வடிவில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.  சில மாதங்களுக்குப் முன்பு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள அரிசியின் விலையானது, தற்போது 60 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தற்போது 25 கிலோ சாப்பாட்டு அரிசி மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளதாக் சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் தரமான முதல் ரக சாப்பாட்டு அரிசி 25 கிலோ மூட்டை ரூ.1,400 ஆக இருந்த நிலையில், அவை தற்போது ரூ.1,600 ஆகவும், 2-வது ரக சாப்பாட்டு அரிசி ரூ.1,200-ல் இருந்து ரூ.1,400 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஒரே மாதத்தில் மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூடியுள்ளது. இட்லி அரிசியும் 25 கிலோ மூட்டை ரூ.850-ல் இருந்து ரூ.950 ஆக உயர்ந்துள்ளது. வியாபாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளது மற்றும் வடமாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாகவே அரிசி விலை உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

மதுரையில் அரிசி விலை கிலோவுக்கு 8ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது.  இங்கு நாட்டு பொன்னி ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 55 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிற து.  மேலும் கர்நாடக பொன்னி விலை ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் உயர்ந்து கிலோ 42 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்கும் பிரியாணி அரிசி ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்பட்ட நிலையில் தற்போது 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதைப் போல் பச்சரிசி விலை ஒரு கிலோவிற்கு 12 ரூபாய் அதிகரித்துள்ளது   ஒரு கிலோ பச்சரிசி 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக விற்கப்படுகிறது. பச்சரிசி குருணை ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் அதிகரித்து, 25 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.