காத்மாண்டு:

லகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ள நிலையில், வன விலங்குகள் ஜாலியாக ஊருக்குள் நகர்வலம் வரும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

பல ஆண்டுகாலமாக வனவிலங்குகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமித்து வரும் நிலையில், தற்போது உருவாகியுள்ள கொடிய தொற்று நோயான  கொரோனா வைரசுக்கு பயந்து அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இந்த சமயத்தை வனவிலங்குகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நகர்வலம் வருகின்றன.

அண்டை நாடான நேபாளத்திலும், கொரோனா பரவலை  தடுக்கும் நோக்கில்  கடந்த மார்ச் மாதம்  24ம் தேதி தொடங்கி வரும் 15ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு அனைத்து நடவடிக்கைகளும் முடங்கி உள்ளன.

இந்த நிலையில் அங்குள்ள சித்வான் தேசிய பூங்காவில் இருந்து வெளியேறிய காண்டாமிருகம் ஒன்று, அருகில் உள்ள ஊர்ப்பகுதியில் ஒய்யாரமாக நடைபோட்டுவரும் வீடியோ வைரலாகி வருகிறது.

சுமார் 45 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், காண்டாமிருகம் ஒன்று சாலையில் செல்லும் நபரை விரட்டி செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றி, நக்கலாக கமென்டும் பதிவு செய்துள்ளார்..

காண்டாமிருகம் ஊரடங்கை மக்கள் சரியாக கடைபிடிக்கிறார்களா என்பதை சோதனை செய்து வருகிறது என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.