சென்னை: இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட்பதிவிட்டுள்ளார். அதில், தமிழகப் பட்டியலின முதல் பட்டதாரி என நினைவுகூர்ந்துள்ளார்.
சென்னை காந்தி மண்டப வளாகத்திலுள்ள இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்வை அர்பணித்த இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று 2011ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று அவரதுபிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், ‘தமிழகப் பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி; அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், காந்தியடிகள் போன்ற பேராளுமைகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக உழைத்த “திராவிடமணி” இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
இரட்டைமலை சீனிவாசன்:
பட்டியலினத்தைச் சேர்ந்தவரான இரட்டைமலை சீனிவாசன் காஞ்சிபுரம் மாவட்டம், கோழியாலம் என்ற கிராமத்தில்1859-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி பிறந்தார். பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அவர் தீண்டாமை கொடுமைக்கு ஆளானார். கோழியாலத்திலும், தஞ்சையிலும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கோவையில் கல்லூரி படிப்பை முடித்தார்.
கோயம்பத்தூர் அரசுக் கல்லூரியில் இளங்கலை படிப்பைத் தொடங்கினார். வெளிப்படையாகவே சாதிப் பாகுபாடு நிறைந்த அந்தச் சூழலில் சீனிவாசனோடு கல்லூரி யில் 400 மாணவர்கள் படித்தனர். அதில் 10 பேர் தவிர மற்றவர்கள் பிராமணர்கள் என்பதால், சீனிவாசன் மிகுந்த சிரமத்தோடு பட்டப்படிப்பை முடித்தார். தமிழகத்தில் மேற்கத்திய கல்வி முறையில் பட்டம்பெற்ற முதல் தலித் பட்டதாரி இரட்டைமலை சீனிவாசன்தான். இந்திய அளவிலும் அவரே முதல் தலித் பட்டதாரி எனவும் சொல்வதுண்டு.
1880-களின் தொடக்கத்தில் நீலகிரியில் ஐரோப்பிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு சீனிவாசனுக்கு தியாசபிக்கல் சொசைட்டியை சேர்ந்த மேடம் பிளாவட்ஸ்கி, கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் ஆகியோருடன் தொடர்பு கிடைத்தது. ஏற்கெனவே அங்கிருந்த தன் உறவினர் அயோத்திதாசப் பண்டிதருடன் இணைந்தும், தனித்தும் இரட்டை மலை சீனிவாசன் அவர்களுடன் அரசியல் செயல்பாட்டில் இணைந்திருந்தார். தலித் வரலாற்றின் இருபெரும் ஆளுமைகளான அயோத்திதாச பண்டிதருக்கும், இரட்டைமலை சீனிவாசனுக்கும் அரசியல் பயிலகமாகவே நீலகிரி விளங்கியது.
இரட்டைமலை சீனிவாசன் இனப்போராளியாகவும், வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் தன்னுடைய வாழ்க்கையை துவங்கினார். தனது இனமக்கள் படும்பாட்டில் இருந்து அவர்களை காப்பாற்றுவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். 1891-ம் ஆண்டு பறையர் மகாஜன சபையை ஆரம்பித்தார். பின்னர் இது ஆதிதிராவிட மகாஜன சபை என்று அழைக்கப்பட்டது. இந்த சபை மூலம் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். 1893-ம் ஆண்டு பறையர் என்ற பத்திரிக்கையைத் துவங்கி ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக இதில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதி, வெளியிட்டார்.
1923-ம் ஆண்டு சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினரானார். 1-1-1926 அன்று அவருக்கு ராவ்சாகிப் பட்டம் அளிக்கப்பட்டது. 1-6-1930 அன்றும் அவருக்கு ராவ்சாகிப் பட்டம் வழங்கப்பட்டது. 6-6-1930 அன்று அவருக்கு திவான்பகதூர் பட்டமும், திராவிடமணி பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்துப் போட காரணமாக இருந்தவரே இரட்டைமலை சீனிவாசன்தான். இரட்டைமலை சீனிவாசன் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக இருக்கையில் நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். 1930-ம் ஆண்டு லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் சார்பில் தலைவர் அண்ணல் அம்பேத்கருடன் இரட்டைமலை சீனிவாசனும் கலந்துகொண்டார். அண்ணல் காந்தியடிகள் துவங்கிய தீண்டத்தகாதோர் ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். 1939-ம் ஆண்டு அண்ணல் அம்பேத்கருடன் சேர்ந்து சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பை தொடங்கினார்.
ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன் 18-9-1945 அன்று தன்னுடைய 85-வது வயதில் இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார். இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளான ஜூலை 7-ம் தேதியை அரசு விழாவாக தமிழகஅரசு கொண்டாடி வருகிறது.