மதுரை: பாஸ்போர்ட் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கை தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது என்று கூறினார். நீதிபதியின் இந்த தீர்ப்பு விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு, வருத்தப்பட வேண்டிய விசித்திர தீர்ப்பு என்று ஒய்வுபெற்ற நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்து உள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு பெறப்பட்ட எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்தபோது காவல்துறையினர் என் மீது குற்ற வழக்கு இருப்பதாக தெரிவித்தனர். நசுருதீன் என்பவர் மீதான வழக்கில் எனக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டு இதுபோல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், . நசுருதீன் என்பவர் எனது பயண ஏஜென்ட் மட்டுமே. அவருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆகவே எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும்.” என கூறியிருந்தார் இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது குற்றமில்லை என்பது உறுதியானதால் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிடப்படுகிறது. அதேசமயம் பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர் என்று கூறியதுடன், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பேசிய பாஜகவின் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையெனில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு பல விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, ஜி.ஆர்.சுவாமி நாதன் மாணவராக சட்டம் பயிலும்போதே எனக்கு தெரியும். அவர் ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தை உள்வாங்கியவர், ஏபிவிபி மாணவர் அமைப்பில் செயலாற்றியவர். அவர் அதை ஒருபோதும் மறைத்தது இல்லை என்று கூறினார்.
மேலும், அவர் பாஸ்போர்ட் வழக்கிய தீர்ப்பு விசனப்படும் படி இருப்பதாக கூறியவர், இந்த வழக்கில் அண்ணாமலைக்கு பாராட்டும், அவர் குற்றம்சாட்டிய டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு குற்றச்சாட்டில் இருந்து விலக்கும் அளித்துள்ளார். இது நேர் விரோத நிலை. இதை சுவாமிநாதனால் மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவித்து உள்ளார்.