சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. கே. ராஜன் தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கை சுகாதாரத்துறையின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டபட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2017ம் ஆண்டு முதல் மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை எதிர்கொள்வதில் தமிழ்வழி படிக்கும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுவதால், பல மாணாக்கர்கள் தங்களது மருத்துவர் கனவு கலைந்துவிட்ட சோகத்தில் தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் சட்ட திருத்தம் கொண்டு வந்தும், அதை செயல்படுத்த முடியாத நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், நீட் தேர்வு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து, ஆய்வு அறிக்கை பெற்று அதைக்கொண்டு நீட் தேர்வு விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.  கடந்த 19ம் தேதி, நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்தும் பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடத்தப்படும் என அறிவித்தும் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது. இதனிடையே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநரிடம் சர்பித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு மத்தியஅரசு, உச்சநீதி மன்றம் அனுமதி வழங்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதற்கிடையில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு  கடந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்ட 165 பக்கங்களை கொண்ட இந்த ஆய்வறிக்கை சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் அளித்த பரிந்துரையின் சில முக்கிய அம்சங்கள்  :-

தமிழகத்தில் நீட் தேர்வல் தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு, கல்வி பாதிக்கப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும்.

அதேபோல், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நீட் தேர்வு மட்டுமல்ல எந்தவித பொது நுழைவு தேர்வும் நியாயமானதாக இருக்காது.

நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஆங்கில வழி மாணவர்களின் சதவீதம் 56.02% முதல் 69.53% ஆக உயர்ந்தது. ஆனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சதவீதம் 14.44% முதல் 1.7% ஆக குறைந்தது.

நீட் தேர்வு காரணமாக தமிழ்வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை நான்காண்டுகளில் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறை ஏழை- எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கான வாய்ப்புக்களை மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு கோச்சிங் சென்டர்களை பிரபலப்படுத்துகிறதே தவிர கற்றலை அல்ல..

குறிப்பாக முதல் முறை நீர் தேர்வு எழுதுபவர்களை விட, ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் தேர்வு எழுதுபவர்களுக்கு தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது.

இதற்கு சுமார் 1 லட்சம் முதல் 4.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது.

12ம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களைப் புறக்கணித்து தனியார் பயிற்சி நிலையங்களை ஊக்குவிப்பதால் கிராமப்புற, பழங்குடி மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீட்தேர்வு தொடர்ந்தால் தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்றும் , சுதந்திரத்திற்கு முந்தைய கால நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு முந்தைய ஆண்டில் பள்ளிகளில் படித்த கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாகவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து விட்டதாகவும் ஏ.கே ராஜன் குழு தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் மாநிலக் கல்வியில் பயின்ற மாணவர்களின் சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், அதே நேரம் சிபிஎஸ்இ மாணவர்களின் சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிகர்நிலை பல்கலைக்கழங்களை மாநில அரசின் அதிகாரத்தில் கொண்டுவர சட்டமன்றத்தில் தனியாக சட்டமியற்ற வேண்டும் எனவும் ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தொடங்கலாம்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் அனுமதியை பெறலாம்.

நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றுவது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீட் தொடர்பான ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – முழு விவரம் காண கீழே உள்ள லிங்கை ஓப்பன் செய்யுங்கள்…

Justice A. K. Rajan Committee Report – NEET Impact