சென்னை: அரசு காலி பணியிடங்களுங்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்வு  அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகளுக்கான இடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து நியமனம் செய்து வருகிறது. இந்த தேர்வு கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் நடத்தப்படாமல் உள்ளது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பி இருப்பதால், மீண்டும் காலிபணியிடங்களுக்கான தேர்வை நடத்த  அரசு பணியாளர் தேர்வாணையம்  முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக நாளை அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரிகள்  இந்த ஆண்டு நடத்த வேண்டிய தேர்வுகள் குறித்த ஆலோசனையை நடத்த உள்ளனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், செயலாளர் தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் குரூப் 2, குரூப் 2ஏ ,குரூப் 4 ஆகிய முக்கிய தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில்  பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள தேர்வுகள் குறித்த அறிவிப்பு மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது