டில்லி.

கே ஒய் சி புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் நடப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கே ஒய் சி என்பதன் விரிவாக்கம், நோ யுவர் கஸ்டமர் ஆகும்.  இதன்படி வங்கியின் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் தங்களைக் குறித்த விவரங்களை அதாவது ஆதார் எண், முகவரி, பான் எண் உள்ளிட்ட அனைத்து தக்வல்களைய்ம் வங்கிக்கு அளிக்க வேண்டும்.

வங்கியில் கணக்கு வைத்திருப்போரில் பலருக்கும் கே ஒய் சி குறித்த புரிதல் இருப்பது இல்லை.  ஆகவே இதைப் பயன்படுத்தி பலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனவே இது குறித்து பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரிசர்வ் வங்கிவெளியிட்ட அறிவிப்பில் ,

“கே ஒய் சி புதுப்பிப்பு என்ற பெயரில் எந்த ஆவணங்களையும் அறிமுகமில்லாத நபர்களிடம் பொதுமக்கள் பகிரக் கூடாது.

இது தொடர்பாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசும் அடையாளம் தெரியாத நபா்கள் அல்லது குறுஞ்செய்திகளை அனுப்புபவா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்களிடம் டெபிட், கிரெடிட் காா்டு தகவல்கள், கடவுச்சொல், ஓடிபி உள்ளிட்டவற்றை எக்காரணம் கொண்டும் பகிரக் கூடாது. 

கைப்பேசி அழைப்பு, குறுஞ்செய்தி மட்டுமின்றி மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் இதுபோன்ற மோசடி முயற்சிகள் நடைபெறுகின்றன. 

அதில் கேஒய்சி புதுப்பிக்காவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கு உடனடியாக முடக்கப்படும் என்றுகூறி பதற்றத்தை உண்டாக்கி மோசடி செய்யும் விஷமிகளும் உள்ளனா். எனவே, இதுபோன்ற விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். 

கேஒய்சி புதுப்பிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு வங்கிகளை நேரடியாக அணுகுவது அல்லது வங்கி சேவைக்கான தொடர்பு எண்ணைப் பயன்படுத்துவதே முறையான செயல்முறையாகும்” 

என்று கூறப்பட்டுள்ளது.