டெல்லி: ஜிஎஸ்டி வரியின் வளர்ச்சி; உயரும் பணவீக்கம் போன்ற காரணங்களால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்து உள்ளார். 8-வது முறையாக வட்டி விகிதங்களை மாற்றாமல்  உள்ளது ரிசர்வ் வங்கி.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கூடும். அதன்படி இன்று (8ந்தேதி)  ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம்  நடைபெற்றது. இதில்,  முக்கியமான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என ரிசர்வ் வங்கியின் ஆறு இயக்குநர் களில் ஐந்து பேர் சொன்னதாகவும், ஒரே ஒருவர் மட்டும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யலாம் என்று சொன்னதாகவும் தெரிகிறது.

இவட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின. ஏற்கனவே எரிபொருட்கள் விலை உயர்வால் மக்கள் கடுமையான சுமைகளை சுமந்து வரும் நிலையில், வரி உயர்வும் இருந்தாலும், சாமானிய மக்களின் மீது மேலும் சுமை ஏறும் என்றும் விமர்சிக்கப்பட்டது.

ஆனால்,  செய்தியாளர்களை சந்தித்த  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வட்டி விகிதங்களில் மாற்றமில்லை தற்போதுள்ளபடியே, ரெப்போ ரேட் வட்டி விகிதமானது 4% என்கிற அளவிலேயே இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். கடந்த ஜூலை – செப்டம்பர் இடையிலான காலாண்டில் பணவீக்கம் என்பது எதிர்பார்த்த அளவைவிட குறைவாகவே இருந்ததாகவும், அதனால் வட்டி விகிதங்களில் மாற்றமும் எதுவும் செய்யப்பட வில்லை என்றும் கூறியிருக்கிறார்.

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை, தொடர்ந்து 4 சதவீதமாக இருக்கும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 3.35 சதவீதம் தொடரும் என கூறினார்.

‘2021 – 22 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2021-22 இரண்டாம் காலாண்டில் 7.9 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 6.8 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 6.1 சதவீதமாகவும் இருக்கும். 2022- 23ம் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 17.2 சதவீதமாக இருக்கும்

.2022 நிதியாண்டில் நுகர்வோர்  பணவீக்கம் 5.3% ஆக இருக்கும். 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நுகர்வோர்  பணவீக்கம் 5.2% ஆக இருக்கும்.’ என்று தெரிவித்தார்.

இதன் மூலம் வட்டி விகிதங்களில் எட்டாவது முறையாக மாற்றங்கள் செய்யாமல் பழைய நிலையிலேயே நீடிக்க ரிசா்வ் வங்கி முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜி.எஸ்.டி வரியின் வளர்ச்சி விகிதம் 9.5% எனற அளவில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறையக் கட்டாயம் வாய்ப்பு இல்லை. இதன் மூலம் கனவு வீட்டை வாங்கத் திட்டமிடுவோர் தற்போது வங்கிகளில் இருக்கும் மிகவும் குறைவான வட்டி விகிதத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல் வாகன கடன், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமும் குறையாது என கூறப்படுகிறது.