சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகஅரசு 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என  நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் மருத்துவம் படிப்பதில் சிக்கல் எழுந்துள்ள  நிலையில்,  தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும்  மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால், அவர்கள் மருத்துவப் படிப்பில் சேர  ;7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, பெரும் இழுபறிக்கு பின்னர் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக,  தமிழகத்தில் சுமார் 300 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைப்பது உறுதி ஆகியுள்ளது.

இந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் பினேகாஸ் என்பவர், நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்திஅமர்விடம்  வலியுறுத்தினார். அரசுப் பள்ளி இல்லாத பல இடங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள்தான் இருக்கின்றன என்றும் இங்கும் ஏராளமான ஏழை மாணவர்கள் படிப்பதால் அவர்களுக்கும் அரசு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது முறையீட்டை, மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இது தொடர்பான வழக்கின் விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது