சென்னை:  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுவதை உறுதி செய்ய, கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக்ககல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி  பள்ளிகள் திறக்கப்படும் என்றும், முதல் கட்டகமாக  9,10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று படிக்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பள்ளிகள் திறப்பை மேலும் ஒத்தி வைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்த நிலையில, பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என புதன்கிழமை தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தியில், தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும்.

இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். நேரில் வர முடியாதவர்கள் கடிதம் மூலம் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம். கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  பள்ளிகள் திறப்பது குறித்து  தமிழகத்தில் உள்ள 7,370 மேல்நிலைப் பள்ளிகள், 5330 உயர்நிலைப் பள்ளிகள் என 12,700 பள்ளிகளில் வரும் 9ம் தேதி கருத்துக் கேட்கவும், அதனை கல்வித்துறை அலுவலர்கள் உறுதி செய்யவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.