சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில்த ற்போது மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்றைய கூட்டத்தொடரில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்வது கடினமாக இருக்கிறது. உயர்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதில்லை. கிராமப்புற மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு 2006-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

ஏற்கனவே மருத்துவப் படிப்பில் 7.5 உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது, அதைப்போலவே பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து அறிய, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் உள்ளிட்ட துறைகளில், இளநிலை தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தது அக்குழுவின் ஆய்வில் தெரியவந்தது.

தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களோடு போட்டியிடுவதில் அரசுப் பள்ளி மாணவர்கள் பின் தங்குகின்றனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதோடு 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என ஆணையம் பரிந்துரைத்தது. அக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.” எனப் பேசினார்.

பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவை ஒருமனதாக நாங்களும் ஆதரிக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.