காஞ்சிபுரம்:
மிழகத்தில் புதிய அணைகள் கட்ட வேண்டும் என்று  தமிழகஅரசுக்கு காஞ்சிபுரத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அன்புமணி ராமதாஸ் பேசியபோது,  பாலாற்றினை பாதுகாக்க பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கறிது.   இரு வாரங்களுக்கு முன்பு வேலூரில் ஆர்பாட்டம் நடத்தியதையும் குறிப்பிட்டு பேசினார்.
மேலும், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தற்போது 7 புதிய தடுப்பணைகள் கட்டி இருக்கிறார்கள். மேலும் 5 இடங்களில் உள்ள தடுப்பணைகளின் உயரத்தினை உயர்த்த திட்டமிட்டு தற்போது புல்லூர் என்ற பகுதியில் உள்ள தடுப்பணையின் உயரத்தினை 7 அடியில் இருந்து 16 அடியாக உயர்த்தி உள்ளார்கள்.   ஆந்திரஅரசின் இந்த செயலால் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் என சுமார் 1 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
அணை உயரம் செய்திருப்பது காரணமாக  குடிப்பதற்கும், வேளாண்மைக்கும் நீர்பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆந்திர அரசு  வனத்துறை, சுற்றுச்சூழல் துறைகளின் அனுமதியின்றி இந்த அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தின் நீர் மேலாண்மை முறையாக கடை பிடிக்கப்படாததால் கடந்த ஆண்டு தமிழகத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்ட போது 31 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலந்தது.
தமிழக விவசாயிகள் பொது மக்களின் நலன்களை காக்க தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் பாலாறு சம்மந்தமாக போடப்பட்ட வழக்குகளில் விரைவு காட்ட வேண்டும்.
நீர்ஆதாரங்களை பெருக்கும் வகையில்  தமிழகத்தில்  புதிய அணைகள் மற்றும் தடுப்பணைகளை கட்ட அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சிகாலத்திற்கு பிறகு புதிய அணைகள் ஏதும் கட்டப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.