சென்னை:
 போலீஸ் மானிய கோரிக்கை மீது ஸ்டாலினை சட்டசபையில் வைத்து விவாதிக்க ஜெ.வுக்கு தைரியமில்லை என தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறினார்.
சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீது பேசிய முதல்வர் ஜெயலலிதா, சஸ்பெண்ட் செய்யப்படாத கருணாநிதி சட்ட சபைக்கு வர வேண்டும், வந்து மானிய கோரிக்கைமீது பேச வேண்டும் என்று சவால் விடுத்தார்.
சட்டசபை அமளி காரணமாக  திமுக உறுப்பினர்கள் 79 பேர் ஒரு வார காலத்துக்கு  சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, இன்று திமுக மகளிர்அணி தலைவி கனிமொழி எம்.பி. கூறியதாவது:
காவல்துறை மானிய கோரிக்கையின் போது தி.மு.க., உள்ளே இருக்கக்கூடாது என்பதால் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
மேலும்,  ஸ்டாலினை சட்டசபையில் வைத்து பேச ஜெயலலிதாவுக்கு தைரியமில்லை என்றும், தி.மு.க. உறுப்பினர்களை சட்டசபையில் வைத்து ஜெயலலிதா விமர்சனம் செய்திருக்க வேண்டும் என்றார்.
திமுக உறுப்பினர்கள் எல்லோரையும் வெளியேற்றிவிட்டு விமர்சனம் செய்வதால் என்ன பயன்? கருணாநிதி சட்டசபைக்கு வர வேண்டும் எனக்கூறும் ஜெயலலிதா, அவர் வருவதற்கான வழிமுறைகளை செய்ய தயாராக இல்லை. அப்படி இருக்கும்போது,  சவால் விடுவதால் அர்த்தமில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது பற்றி முதலில் பேச வேண்டும் என்றார்.