புதுடெல்லி: அதிகப்படியான தள்ளுபடி, மிகக்குறைந்த விலை நிர்ணயம் மற்றும் சரக்குகளை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் மின் வணிக நிறுவனமான அமேசான், பிளிப்கார்ட் போன்றவை ஈடுபடுவதால், அதை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும் என அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அந்த கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது; அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்திலுள்ள ஓட்டைகளை பன்னாட்டு நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் (வால்மார்ட்) பயன்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக விசாரித்து அபராதம் விதிக்க வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் பத்திரிகைக் குறிப்பு 2018ம் ஆண்டின் 2க்கு பதிலாக, சட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைத்து, பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டாத வகையில் புதிய மின் வணிக கொள்கை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நாக்பூரில் பிப்ரவரி 8 முதல் 10 வரை நடந்த வர்த்தகர்கள் மாநாட்டில், இப்பிரச்சினையில் அரசாங்கம் செயலற்று இருப்பதாகவும், அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானித்தனர்.

அதேசமயம், இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள இரு நிறுவனங்களும், தாங்கள் இந்திய சட்டங்களுக்கு இணங்கியே தொழில் செய்வதாக கூறியுள்ளனர். லட்சக்கணக்கான விற்பனையாளர்களுக்கும், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கும் இடையில் வெளிப்படையான மற்றும் திறமையான வழியில் உதவுகிறோம் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.