சென்னை: குடியரசு தின விழா அன்று தலைநகர் டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் அலங்கார ஊர்திகளும், காவல்துறை உள்பட பல்வேறு அணிவகுப்புகளும் நடைபெறுவது வழக்கம். அத்துடன், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு, காவல்துறையின் அணிவகுப்பு வீரதீர சாகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், 4 அலங்கார ஊர்திகள் மட்டுமே இடம்பெறும் என்றும், கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கலை நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமான அலங்கார ஊர்திகள் இடம்பெறும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாநிலங்களைச் சேர்ந்த 12 ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் 4 ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2022ம் ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்பிற்கு தமிழ்நாட்டில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட ஊர்திகள் இடம்பெறவில்லை. தமிழக அரசின் ஊர்திகளை மத்திய அரசு நிகரித்தது சர்ச்சையானது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியும், அதை ஏற்க மத்தியஅரசு மறுத்து விட்டது. அதனால், தமிழகத்தின் சார்பில் இடம்பெறுவதாக இருந்த ஊர்திகள், மாநிலத்தில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பின்போது இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து, குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெற 29 பரிந்துரைகள் வரபெற்றன. இதில், தமிழகத்தின் ஊர்தியால் இறுதி பட்டியலுக்கு தேர்வாக முடியவில்லை. நேரம் மற்றும் இடப்பற்றா குறை காரணமாகவே குடியரசு தின விழா அணிவகுப்பில் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட தாக தெரிவித்தது. இதில் வேறு எந்த காரணமும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள வருவது குறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பார்வையாளர்கள் காலரி காலை 7 மணிக்கே திறந்துவிடப்படும். பார்க்கிங் வசதி குறைக்கப்பட்டுள்ளதால் விழாவுக்கு வருவோர் வாடகை கார் அல்லது ஒரே காரில் பலரும் பகிர்ந்து வரவும். விழாவுக்கு வருவோர் அடையாள அட்டைகள் வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு துறை சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு பார்க்கிங் பகுதியிலும் ரிமோட் கன்ட்ரோல் வசதியுள்ள கார் சாவிகளை ஒப்படைக்க தனியிடம் இருக்கும். அங்கே சாவிகளை ஒப்படைத்துவிட்டே விழா பகுதிக்குள் நுழைய வேண்டும். ஒவ்வொரு நபரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். 15 வயதுக்கு குறைவான வயதுடையோருக்கு நிகழ்ச்சியில் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பின்போதும் 4 ஊர்திகள் மட்டுமே இடம்பெறும் என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நடப்பாண்டு குடியரசு தின நிகழ்ச்சியானது, வழக்கமாக நடைபெறும் ஒரு மணி நேரத்திற்கு பதிலாக 35 நிமிடம் மட்டுமே நடக்கும் என்றும், டெல்லி பேரணி யில் பங்கேற்க மறுக்கப்பட்ட அலங்கார உறுதி இங்கு இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பு நடைபெற உள்ள முதல் குடியரசு தின விழா இதுவாகும்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ந் தேதி காலை 8 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களை அணிவிக்கிறார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று அரசு துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட இருந்த வீரமங்கை வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோரின் அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் மட்டும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
முதலாவது அலங்கார ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள ஊர்தி இடம் பெறுகிறது. அதில், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி குழுவினரின் நாதஸ்வரம், தவில், வீணையுடன் கூடிய மங்கள இசை இடம் பெறுகிறது. அதே அலங்கார ஊர்தியில் மங்கள இசைக்கு ஏற்ப பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இதுதவிர வள்ளுவர்கோட்டம் தேர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெறுகின்றன.
2வது அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோரது சிலைகளுடன் வேலூர் கோட்டை, காளையார்கோவில் கோபுரம் ஆகியவை இடம் பெறுகின்றன.
3-வது அலங்கார ஊர்தியில், சுதந்திரத்துக்காக பாடுபட்ட வ.உ.சி. செக்கு இழுக்கும் நிகழ்வு, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி மற்றும் அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிப்படுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் இடம் பெறுகிறது.
4வது அலங்கார ஊர்தியில் பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், இரட்டைமலை சீனிவாசன், வ.வே.சு.அய்யர், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், காமராஜர், காயிதே மில்லத், ஜோசப் சி குமரப்பா ஆகிய தலைவர்களை சித்தரிக்கும் சிலைகள் இடம் பெறுகின்றன.
இதுதவிர மத்திய அரசின் சார்பில் தரைப்படை, கடற்படை, விமானப்படையின் சாதனைகளை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வருகின்றன. போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் மெரினா கடற்கரையில் ஒரு மணி நேரம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 35 நிமிடத்தில் விழாவை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.