சென்னை
தார் பற்றாக்குறையால் சென்னை சாலைகள் செப்பனிடப்படாமல் மேலும் பழுதடந்து வருகின்றன.
சென்னை நகர சாலைகள் பல செப்பனிடாமல் உள்ளன. குறிப்பாக நகரில் நடமாட்டம் அதிகமுள்ள சாலைகள் பல பாழாகி உள்ளன. இதை ஒட்டி சென்னை மாநாகராட்சி செப்பனிடும் வேலைகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரியது. ஒப்பந்தப் புள்ளி அளித்தவர்களை தேர்ந்தெடுத்து பணி அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த பணிகள் தற்போது அரைகுறை நிலையில் உள்ளன. பல இடங்களில் ஜல்லிகள் மட்டும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. தார் போடப்படாததால் சாலைகள் மீண்டும் பாழாகி வருகின்றன. அத்துடன் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும் தூசு பறப்பதால் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இது குறித்து இருசக்கர வாகன பயணியான ராதா என்பவர், “தார் போடப்படாததால் சாலை எங்கும் தூசு மயமாக உள்ளது. அதனால் என்னப் போன்ற பலர் முகத்தை மூடிக் கொண்டு முகமூடி கொள்ளைக்காரிகள் போல் பயணம் செய்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி துணை ஆணையர் கோவிந்த ராவ். “எங்களுக்கு சாலைகள் குறித்த புகார்கள் வருகின்றன. ஆனால் தற்போது தார் கைவசம் கிடையாது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் சாலை பராமரிப்பு செய்வதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாங்கள் இந்தியன் ஆயில் கார்பொரேஷனுக்கு தார் டிரம்களை உடனடியாக அளிக்க வேண்டும் என கடிதம் எழுதி உள்ளோம். நமக்கு மாதம் சுமார் 4800 டன்கள் அளவுக்கு தார் தேவைப்படுகிறது என்பதையும் அவர்களுக்கு விளக்கி உள்ளோம். விரைவில் தார் தட்டுப்பாடு நீங்கும்” என தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் ராமராவ், “தார் தட்டுப்பாடு மட்டும் சாலை செப்பனிடப்படாததற்கு காரணம் இல்லை. தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலில் உள்ளன. இதனால் சாலைப் பணிகளை செய்ய எதிர்க்கட்சியினர் தடை விதிக்கின்றனர். ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட வேலைகளையும் தொடர விடுவதில்லை.” என தெரிவித்துள்ளார்.