சென்னை: வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களை, புதிய வாடகைதாரர் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யும் அவகாசத்தை 3 மாதங்கள் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக 200 ஒப்பந்தங்கள் மட்டுமே அந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதால், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின் மூலம், வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தம் தொடர்பாக ஏற்படும் சிக்கல்களை தீர்க்க, எடுத்த எடுப்பிலேயே தீர்ப்பாயத்தையோ அல்லது நீதிமன்றத்தையோ நாட வேண்டியதில்லை.

அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் மூலமாக சமரசம் பேசி, தீர்வுகாண முயற்சிக்கப்படும். அதில் தீர்வு ஏற்படாத நிலையில் மட்டுமே, மேல்முறையீட்டிற்காக நீதிமன்றத்தையோ அல்லது தீர்ப்பாயத்தையோ நாடலாம்.

இந்த சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படாத ஒப்பந்தங்களை, அதிகாரிகள் விசாரணைக்கு ஏற்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.