ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், டீக்கடை உரிமையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் பல நாட்களாகவே பராமரிக்கப்படாத நிலையிலேயே உள்ளது. சமீப நாட்களாக பேருந்து நிலையத்தின் மேற்கூரையில் விரிசல் காணப்பட்ட நிலையில், அதுகுறித்து பயணிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை இருந்து வந்தது. இதனால் எப்போது, என்ன ஆபத்து ஏற்படும் என்கிற அச்சத்திலேயே பயணிகள் பயணித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் இன்று பகல் 1 மணிக்கு பேருந்து நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்த மேற்கூரையால், அருகில் டீக்கடை நடத்தி வந்த குருநாதன் என்பவர் பலத்த காயமடைந்தார். பேருந்துநிலையத்தில் இருந்த பயணிகள் பலரும், குருநாதனை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது, பேருந்து வளாகத்தில் உள்ள இரு கடைகளும் சேதமடைந்துள்ளன.