சென்னை: வாடகை மற்றும் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ள சென்னை  உயர்நீதிமன்றம், ஏப்ரல் 30ம் தேதிக்குள் இடத்தை காலி செய்யவும் கெடு விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரி, கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். இந்த இடமானது,  கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் வெங்கடேஸ்வரலு என்பவருக்கு சொந்தமானழ. இந்த இடம் தொடர்பாக வெங்கடேஸ்வரலுவுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், பள்ளி இருக்கும் இடத்திற்கான வாடகை ரூ.10 கோடியை நிர்வாகம் அளிக்கவில்லை, என கூறி வெங்கடேஸ்வரலு  கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டது.

இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர்கள் கூறுகையில், “2016ம் ஆண்டு முதல் இந்த பள்ளி கட்டிடத்திற்கான வாடகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறினோம். ஆனால், நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் வழக்கு தொடர்ந்தோம். 10 கோடி ரூபாய் நிலுவை உள்ளதாக குறிப்பிட்டோம். ஆனால், நீதிமன்றம் அவ்வளவு தர முடியாது, ரூ.2 கோடி வழங்க உத்தரவிட்டனர். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டோம். ஆனால், அந்த ரூ.2 கோடியை வழங்கக் கூட ஆஸ்ரம் நிர்வாகம் முன்வரவில்லை. அதனால் கேட்டை பூட்டினோம்”

ஆனால், இந்த குற்றச்சாட்டை லதா ரஜினிகாந்த் மற்றும் பள்ளி நிர்வாகம் மறுத்தது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில், நாங்கள் பின் வரும் இந்தத் தகவலை அளிக்கிறோம். நாங்கள் கிண்டியில் இருக்கும் எங்கள் பள்ளியை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறோம். சமீபகாலமாக நில உரிமையாளரின் குடும்ப தகராறு காரணமாக நாங்கள் அவர்களிடமிருந்து அநேக தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம். இது வாடகை பற்றியது மட்டும் அல்ல என்று தெரிவித்ததுடன்,  அந்த இடத்தை காலி செய்வது குறித்தும் முடிவெடுத்துள்ளோம். மேலும், இப்பிரச்னையை முடிப்பது தொடர்பாக பேச்சு வார்தைகளில் ஈடுபட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் வழக்கின் விசாரணையில், நீதிமன்ற உத்தரவிட்டும் லதா ரஜினிகாந்த்  நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது. 

பல ஆண்டுகளாக இது தொடர்பாக பிரச்னை இருப்பதும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

அதில், ஆஸ்ரம் பள்ளியில் 2021-22ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஏப்ரல் 30, 2021க்குள் இடத்தை காலி செய்து கொடுக்கும்படியும்  உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் இடத்தை காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது.

ஏற்கனவே லதா ரஜினிகாந்த், தனது ஆழ்வார்பேட்டை கடை வாடகை, ஆஸ்ரம் பள்ளி ஆசிரியர்களின் சம்பள விவகாரத்தில்  நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லதா ரஜினிகாந்த் வாடகையை ஏற்காவிட்டால் காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம்: நீதிமன்றம் உத்தரவு

 

வாடகை: ரஜினியின் கருத்துக்கு எதிராக மாநகராட்சி மீது லதா ரஜினிகாந்த் வழக்கு!