சென்னை

மாமல்லபுரத்துக்கு இதற்கு முன்பு வந்த சீனத் தலைவர் சூ என்லாய் பற்றிய செய்திக் குறிப்பு

மாமல்லபுரத்தில் இருந்து 14 கிமீ தூரத்தில் உள்ள குழிபந்தலம் என்னும் கிராமத்தில் இந்தியப் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்திப்பு நிகழ்த்துகிறார்.   ஜி ஜின்பிங்குக்கு மாமல்லபுரப் பயணம் இதுவே முதல் முறையாகும்.   ஆனால் இவர் இங்கு வருகை தரும் மற்றொரு சீன அதிபர் எனவே சொல்ல முடியும்.  கடந்த 1956 ஆம் வருடம் அப்போதைய சீன அதிபரான சூ என்லாய் இதே கிராமத்துக்கு வந்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் நான்காம் வகுப்பு மாணவராக இருந்த முத்துக்கிருஷ்ணன் என்னும் 74 வயது முதியவர் இது குறித்து தன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். முத்துக்கிருஷ்ணன், “அன்று மாலை சுமார் 4 மணி அளவில் 10 கார்கள் வந்து எங்கள்  பள்ளிக்கு முன்பு நின்றது.  அங்குப் புதிதாகக்  கட்டப்பட்டிருந்த சுகாதார மையத்தை நோக்கி நானும் எனது நண்பர்களும் ஆர்வத்துடன் கூட்டத்தினுள் புகுந்து சென்றோம்.

அங்குச் சீன அதிபர் பேசியதை ஒருவர் தமிழில் மொழி பெயர்த்தார்.   சீன அதிபர் எங்கள் சிற்றூர் அழகாக உள்ளதாகவும் இதை ஒரு மாதிரி கிராமம் என அழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தர்.  எங்கள் சிற்றூரில் ஒரு சமுதாய வானொலி மையம் மற்றும் நூலகம் இருந்ததால் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  எங்கள் கிராம மக்கள் சூ வுக்கு கொடுத்த இளநீரை எப்படிக் குடிப்பது என அவருக்குத் தெரியவில்லை.  பிறகு நாங்கள் அவருக்குச்  சொல்லிக் கொடுத்தோம்.

கடந்த 1956 ஆம் வருடம் டிசம்பர் மாதம்5 ஆம் தேதி அன்று மீனம்பாக்கத்தில் வந்து இறங்கிய சூ என்லாய்க்கு நேரு விளையாட்டரங்கில் மாபெரும் வரவேற்பு நடந்தது.   அதன் பிறகு அவர் எஸ் எஸ் வாசன் அழைப்பின் பேரில் ஜெமினி ஸ்டூடியோவுக்கு சென்று பார்வையிட்டார்.  அப்போது பத்மினி நடனமாடிய ஒரு படப்பிடிப்பையும் அவர் பார்த்தார்.

அடுத்த நாள் எங்கள் ஊருக்கு வந்த சூ அங்கு ஒரு தாய் சேய் நலவிடுதியை திறந்து வைத்தார்.   இந்த வருகையின் போது அவர் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையைப் பார்வை இட்டுள்ளார்.   அந்த தொழிற்சாலையின் விருந்தினர் வருகை பதிவேட்டில் அவர் இது ஒரு நவீனமான தொழிற்சாலை எனவும் இந்த தொழிற்சாலைக்குச் சீனர்கள் வந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது எனவும் புகழ்ந்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.