சென்னை: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு 50 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக கடந்த மாதம் 14ம் தேதி மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நிலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 48 ஆயிரத்து 593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக 50 கோடியே 88 லட்சம் ரூபாய் இடுபொருள் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிக பாதிப்புக்குள்ளான மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,031 விவசாயிகளுக்கு 43 கோடியே 92 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கடலூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் 8 ஆயிரத்து 562 விவசாயிகளுக்கு 6 கோடியே 96 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.