சென்னை;  கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட சுமார் 2300 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.திமுக தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்படாமல் வேலையை விட்டு துரத்தி இருப்பது, செவிலியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில்  கொரோனா அதிகரித்து வந்த காலக்கட்டமான 2009, 2020ம் ஆண்டு, அப்போதைய அதிமுக அரசு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஒப்பந்த அடிப்படையில்  மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.   இதன்படி மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் 2300 பேர் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள்  கடந்த 2 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளிலும் பணியாற்றி வந்தனர். அவர்களின் பணி போற்றுதலுக்குரியது என பாராட்டப்பட்டது. இந்த நிலையில்,  அவர்களின் பணிக்கால ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,  தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவ கல்வி இயக்குநரகம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையின் கீழ் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று  கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 800 பேர் பணி நீட்டிப்பு செய்யாமல் விடுவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள அனைத்து ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்காமல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2021ல் நடைபெற்று  முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் வாக்குறுதியில் 356இல் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் என்று வாக்குறுதியளிக்கப்பட்டது.  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” கோரி வந்த நிலையில், அவர்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்கும் வகையில், திமுக அரசு, அவர்களின் பதவி நீட்டிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதற்கு மாறாக நடந்துகொள்வது, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

திமுக அரசு ஏமாற்றிவிட்டது – தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும்! தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு…