டில்லி
ரிலையன்ஸ் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்க உள்ளது.
சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜஸ்ட் டயல் நிறுவனம் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இந்த நிறுவனப் பங்குகள் மதிப்பு 50%க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனத்தை டாடா நிறுவனம் கையகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வந்தன, ஆனால் அந்த பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன
ஜஸ்ட் டயல் நிறுவனம் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். இந்நிறுவனத்தை வாங்க தற்போது ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. தற்போது பிரமோட்டர் வசம் உள்ள இந்நிறுவனப் பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் 900 மில்லியன் டாலர்கள் அதாவது ரூ.6,600 கோடி விலைக்கு வாங்கத் திட்டமிட்டுள்ளது.
ஜஸ்ட் டயல் நிறுவன இயக்குநர் கூட்டம் இன்று நடந்தது. அதில் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொலைப்பேசி, மொபைல் செயலி மற்றும் இணையம் மூலம் நிறுவன விவரங்களை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஜஸ்ட் டயல் நிறுவனத்தை நிறுவிய வி எஸ் எஸ் மணி என்பவரிடம் 35.5% பங்குகள் உள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனம் இவரிடம் இருந்து பெரும்பான்மையான பங்குகளை வாங்கி அதன் பிறகு ஓபன்ஆஃபர் மூலம் மேலும் 26 % பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மொத்தம் 60% பங்குகளை வாங்கி நிறுவனத்தைக் கையகப்படுத்த உள்ளது. அதே வேளையில் நிறுவன செயல்பாடுகளை நிறுவனர் மணி தொடர்ந்து கவனிக்க உள்ளார்.