டில்லி

டந்த மே மாதம் 15 முதல் ஜூன் 15 வரை 20 ;லட்சம் இந்தியர்களின் கணக்குகளுக்கு வாட்ஸ்அப் தடை விதித்துள்ளது.

மத்திய அரசு சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை அமல்படுத்தி உள்ளது.  இந்த விதிகளின் படி 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்பதாகும்.

இந்த விதிகளுக்கிண்ங்க வாட்ஸ்அப் நிறுவனம் தனது முதல் இணக்க அறிக்கையை நேற்று வெளியிட்டது.  அந்த அறிக்கையில் மே 15 முதல் ஜூன் 15 வரையிலான ஒரு மாத காலத்தில் 345 புகார்கள் பெற்றுள்ளதாகவும் 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமுதாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது தேவையற்ற செய்திகளை அதிக அளவில் அனுப்புவதிலிருந்து கணக்குகளைத் தடுப்பதே எங்கள் முக்கிய நோக்கம் ஆகும்.  ஆகவே அதிக அளவிலான செய்திகளை அனுப்பும் கணக்குகளை மேம்பட்ட திறன்களின் உதவியுடன் கண்டறிந்தோம். இதன் மூலம் மே 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை இந்தியாவில் மட்டும் 20 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளோம்.

அதிக அளவில் செய்திகளை அங்கீகாரமில்லாமல் அனுப்பியதாலேயே 95 சதவீதத்துக்கும் அதிகமான கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது இந்த ஒரு மாத காலத்தில் 345 புகார்கள் எங்களுக்கு வந்ததால் அதன் கீழ் 63 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனக் கூறியுள்ளது.

இதே காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்துக்கு  36 புகார்கள் வந்துள்ளன.சராசரியாக மாதமொன்றுக்கு உலகம் முழுவதிலும் 80 லட்சம் கணக்குகள் தடை/ முடக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.