ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), தமிழ்நாட்டைச் சேர்ந்த சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது.

‘மன்னா’ என்ற முக்கிய பிராண்டின் கீழ், இந்த நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கிய உணவுகள் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வருகிறது.

ஏற்கனவே , உதயம், இன்டிபெண்டன்ஸ், SiL போன்ற பிராண்டுகளை தன் வசப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் ‘மன்னா’வை இணைத்ததன் மூலம் சிறுதானிய அடிப்படையிலான ஆரோக்கிய உணவுகள் துறையில் மேலும் வலுப்பெற்றுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் ஆரோக்கிய உணவுகளுக்கான நம்பகமான பெயராக ‘மன்னா’ உள்ளது.

சிறுதானிய உணவுகள், பானங்கள், குழந்தை உணவுகள் போன்றவற்றில் அது பிரபலமானது. ரிலையன்ஸின் வலுவான விநியோகம், ஆராய்ச்சி மற்றும் சப்ளை செயின் மூலம், ‘மன்னா’வை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் நிறுவனம் சிறுதானியங்கள், ஓட்ஸ், பலதானிய (மல்டி க்ரெயின்) உணவுகள், ஆரோக்கிய கலவைகள், காலை உணவுகள், உலர் பழங்கள் உள்ளிட்ட பல வகை ஆரோக்கிய உணவுகளை தயாரித்து வருகிறது.

‘மன்னா’ ஹெல்த் மிக்ஸ் பிராண்டு, குறிப்பாக சிறுதானிய மாவு, குழந்தை உணவு, மல்டிகிரெயின் பான கலவை போன்றவற்றில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.