டில்லி

செங்கோட்டையில் நிஷான் சாகிப் கொடி ஏற்றிய தீப் சித்து என்பவருக்கும் தமக்கும் தற்போது தொடர்பு இல்லை என நடிகரும் பாஜக எம்பியுமான சன்னி தியோல் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகள் நேற்று டிராக்டர் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.  அந்த பேரணியில் கலந்துக் கொண்ட விவசாயிகளில் சிலர் தீப் சித்து என்பவரின் தலைமையில் அனுமதிக்கப்பட்ட தடத்தை மாற்றி செங்கோட்டை நோக்கிச் சென்றுள்ளனர்.  அங்கு தீப் சித்து விவசாயிகள் கொடி என்னும்  பெயரில் நிஷான் சாகிப் கொடியை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கடும் வன்முறை வெடித்து தற்போது டில்லி நகரில் 144 தடை உத்தரவு இடப்பட்டுள்ளது.  இந்நிலையில் பாஜக மக்களவை உறுப்பினரும் நடிகருமான சன்னி தியோல் மற்றும் மோடியுடன் தீப் சித்து இருக்கும் புகைப்படம் வெளியாகியது.  இதையொட்டி வெளியான தகவல்களின் படி சன்னி தியோல் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட போது தீப் சித்து தேர்தல் பணி ஆற்றியது தெரிய வந்துள்ளது.

அதன் பிறகு சம்பு மோர்ச்சா என்னும் விவசாய அமைப்பைத் தொடங்கிய தீப் சித்து தற்போதைய விவசாய போராட்டங்களில் தமது அமைப்பை இணைத்துக் கொள்ள முற்பட்டுள்ளார். ஆனால் விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.  இந்நிலையில் டில்லியில் டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளித்தது.  அப்போது தீப் சித்து அனுமதிக்கப்பட்ட இடத்துக்கு மாறாக டில்லி நகரினுள் பேரணியை நடத்தி உள்ளார்.

மேலும் அவர் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பே பேரணியைத் தொடங்கியதாகவும் வேறு பாதையில் தனது அடியாட்களின் டிராக்டர்களுடன் பேரணியை செங்கோட்டையை நோக்கித் திரும்பியதும் தெரிய வந்துள்ளது.    இவரும் இவருடைய ஆட்களும் தேசியக் கொடியை இறக்கி அதில் நிஷான் சாகிப் கொடியை ஏற்றியதாக கூறப்படும் நிலையில் அதை தீப் சித்து மறுத்து தாம் தங்கள் கொடியை ஏற்றியதாகவும் தேசியக் கொடியை இறக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஜக மக்களவை உறுப்பினர் சன்னி தியோல் தனது டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சன்னி தியோல் ”எனக்கும் என குடும்பத்தினருக்கும் தீப் சித்து உடன் தற்போது எவ்வித தொடர்பும் இல்லை.  இதை நான் ஏற்கனவே நான் டிசம்பர் 9 ஆம் தேதி தெரிவித்துள்ளேன்.  செங்கோட்டையில் நடந்த நிகழ்வு குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்” எனப் பதிந்துள்ளார்.