சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்துள்ள தமிழக அரசு, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, ஆட்சிக்கு வந்ததும் நகைக்கடன் தள்ளுபடியை அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6000 கோடி நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக 16 லட்சம் பேர் பயனடைவர்.
40 கிராமுக்கு குறைவான நகைக்கடன்கள் தள்ளுபடி, ஒரு குடும்பத்திற்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடு, ஆய்வு அடிப்படையில் ரூ.6000 செலவாகும். மேலும், தள்ளுபடியின் அசல் தொகை, ஏப்ரல் 2021 முதல் அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரையிலான வட்டியை அரசே ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத்தமிழர்களின் நகைக்கடன்களும் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்தால் அக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக அளிப்பவர்கள் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதியானவர்கள் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.