சென்னை

மிழகத்தில் தொடர்ந்து வரும் கனமழையால் பொதுமக்கள் துயர் அடைந்துள்ளனர்.

தமிழகம் எங்கும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது   தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாகவே விட்டுவிட்டு கனமழையும் லேசான மழையும் பெய்து வருகிறது. நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் இரவில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.  இதனால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

திண்டுக்கல்லில் பழனியில் தொடர் மழை காரணமாகக் கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளில் புகுந்தது. இதையொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள், கழிவுநீர் கால்வாயில்களை விரைந்து தூர்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனியில் பெரியகுளம் பகுதியில் 5 நாட்களுக்குப் பிறகு கனமழை நீண்ட நேரம் பெய்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று இரவிலும் சாரல் மழை நீடித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே லேசான மழை பெய்துகொண்டிருக்கும் போது மின்னல் தாக்கியதில் விவசாயப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அரியலூர் அருகே தொடர் மழையால் கயர்லாபாத், சுண்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் சிரமமடைந்தனர்

விருதுநகரில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கன்னியாகுமரி, நெல்லை என பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.